பொதுத் தேர்வு – தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை.. தேர்வுத்துறை எச்சரிக்கை!
புகாருக்கு இடம் தராமல் பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
பொதுத்தேர்வுக்கு அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்றும் குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. இதனால் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மறுபக்கம் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், தேர்வு மையம் அமைக்கும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று தேர்வு அலுவலர்கள், ஆசிரியர்களுடன் தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா ஆலோசனை ஈடுபட்டார். அப்போது, எவ்வித புகாருக்கும் இடம் தராமல் 10,11 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தலை வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.