“அம்மா சொன்னால் சட்டம்;திமுகவே மகிழ்ச்சி வேண்டாம் – முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அளித்த விளக்கம்!
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது என்றும்,மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார் என்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியிருந்தார்.
தேர்தல் ஆணையத்தில் மனு:
குறிப்பாக,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை அவமதித்தாக ஓபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. இதனிடையே,டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
30 நாட்களுக்குள் பொதுக்குழு கட்டாயம்:
இந்நிலையில்,5-இல் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் பொதுக்குழு நடத்தலாம் என்றும்,அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டியது கட்டாயம் எனவும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,சென்னையில் உள்ள ஈபிஎஸ் இல்லம் முன்பாக சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:”அதிமுகவின் சட்டவிதி 19(7)ன் படி பொதுக்குழுவை கூட்ட அறிவித்தோம்.பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பங்கு பேர் கையொப்பமிட்டு கொடுத்தால்,அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பொதுக்குழுவை கட்டாயம் நடத்த வேண்டும்.
முன்னாள் ஒருங்கிணைப்பாளர்:
மாறாக,கழக விதிகளில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளரின் அனுமதி பெற்று பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை.ஆகவே,அவர் சொல்லி இருக்க கருத்து முழுக்க முழுக்க தவறு.மேலும்,நேற்று வரை கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும்,தற்போது பொருளாளராகவும் உள்ள ஓபிஎஸ் அவர்களும்,முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போது கழகத்தின் தலைமைநிலை செயலாளரகவும் உள்ள ஈபிஎஸ் இருவரும் முறைப்படி கையொப்பமிட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இவ்வாறு இருக்க,ஓபிஎஸ் அவர்கள் கையொப்பமிட்ட இந்த கடிதத்தை கழகத்தின் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இல்லை போலி என்கிறாரா?”,என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தேவையில்லை:
மேலும்,அதிமுகவின் சட்ட விதிகள்,பதிவிகள் மாற்றத்திற்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் தேவையில்லை,மாறாக,இது குறித்து தெரிவித்தால் போதும்.எனினும்,அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் தேர்தல் ஆணையம் தான் தலையிட முடியும் என்றும்,உயர்நீதிமன்றம் விதித்த விதிகளின்படி நேற்றைய பொதுக்குழு கூட்டம் முறையாக நடத்தப்பட்டது,இதில் சட்ட விதிமீறல் இல்லை எனவும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
அம்மா சொன்னால் சட்டம்:
இதனைத் தொடர்ந்து,பேசிய சிவி சண்முகம்:”அம்மா இருந்தபோது அவர் என்ன சொன்னாலும் அது எங்களுக்கு சட்டம்.அந்த வகையில்,தலைமைக் கழகத்தின் பொதுக்குழு கூடி அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கழகத்தின் விதி.இதில் பொதுச்செயலாளர்,ஒருங்கிணைப்பளர்கள் கூடி அவைத்தலைவரை தேர்ந்தேடுக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. ஆகவே வைத்திலிங்கம் அவர்கள் கூறியது தவறு.
மேலும்,”கழகத்தின் விதிகளை மாற்றவோ,நீக்கவோ பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.ஆனால்,அதிமுக கட்சி பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று எந்த விதியும் இல்லை.அதுமட்டுமல்லாமல்,23 தீர்மானக்ளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை”,என்றார்.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதி:
இதனைத் தொடர்ந்து,பேசிய அவர்:”ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன.ஏற்கனவே,திருத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு நேற்றைய பொதுகுழுவில் அங்கீகாரம் பெறாததால் காலாவதியானது. மேலும்,விதி 20,பிரிவு 7 இன் படி,கழக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும்,தலைமை கழக செயலாளர்களும் அந்த கழக ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்காலம் வரை மட்டுமே நீடிப்பார்கள்.
இதற்கிடையில்,கழக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் விடுவிக்கப்பட்டால் இடைப்பட்ட காலத்தில் புதிய கழக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படும் வரை,முந்தைய ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியில் நீடித்து கழகப் பணியினை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.அதன்படி,ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டதால் தற்போது அவைத்தலைவருக்கே அதிகபட்ச அதிகாரம் உள்ளது”,என்று கூறினார்.
திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்போது:
மேலும்,உங்களது ஐயா ஓபிஎஸ் அவர்களின் ஒருங்கிணைப்பாளர் பதவியும்,உங்களது துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே போனது.நீங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டீர்கள்”,என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில்,அதிமுகவில் நடப்பதைக் கண்டு திமுகவினர் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம்.திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்போது என்ன நடக்கிறது என்று நாங்களும் பார்ப்போம்”என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில்,அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் நேற்று பேசிய முதல்வர்:”மற்றொரு திருமண மண்டபத்தில் என்ன நடைபெறுகிறது என்பது தெரியும்.ஆனால்,அந்த பிரச்சனைக்கு நான் செல்லவில்லை.அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை.திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்”,என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.