உண்மையை பேசினேன்.. பாஜக பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.! – காயத்ரி ரகுராம் பரபரப்பு.!
உண்மையைதான் பேசினேன். அதனால் தான் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். – தமிழக பாஜக முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காயத்ரி ரகுராம் பேட்டி.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வந்தநிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாத காலத்திற்கு கட்சி பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, இன்று காயத்ரி ரகுராம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ உண்மையைதான் பேசினேன். அதனால் தான் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியவர்களுக்கு, நான் நேரடியாக பதிலடி கொடுத்தேன். என கூறினார்.
மேலும், ‘ என் உணர்வுகளை நான் வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமே இல்லை. என்னால் பாஜகவிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என கூறுவது வேதனை அளிக்கிறது. ஒரு பெண்ணை தவறாக பேசுவதை என்றுமே ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது தான் எனது கடமை. என குறிப்பிட்டார்.
மேலும், ‘ பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால், இங்கு என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் என்றும் பாஜக தொண்டர் தான். என கூறினார்.
இதனை அடுத்து, பாஜக மேலிடம் தன்னை அழைத்தால் நிச்சயம் தமிழக பாஜகவில் நடப்பதை பற்றி தெளிவான விளக்கம் அளிப்பேன். சூர்யா சிவாவை கண்டிப்பாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனவும் தனது கோரிக்கையை முன்வைத்து காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.