8 மணி நேர போராட்டம்… மீட்கப்பட்ட எரிவாயு டேங்கர் லாரி அனுப்பி வைப்பு!
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் விபத்துக்குள்ளான எரிவாயு டேங்கர் லாரி 8 மணி நேரத்துக்குப்பின் மீட்கப்பட்டது.
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி இன்று (03-01-2025) அதிகாலை 2:30 மணிக்கு உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்து சமையல் எரிவாயு கசிய தொடங்கியதால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.
விபத்தின்போது, டேங்கர் லாரியில் இருந்து எல்பிஜி வெளியேறிய நிலையில், ஆபத்துகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக தீயணைப்புத்துறையினர் தண்ணீரை லாரியின் மீது பாய்ச்சினர். மேலும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனையடுத்து, விபத்து நடந்த மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.
பின்னர், விபத்துக்குள்ளான டேங்கர் லாரி அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில், மூன்று ராட்சத கிரென் உதவியுடன் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, டேங்கர் லாரி பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
மீட்கப்பட்ட கேஸ் டேங்கர் லாரி, கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் குடோனுக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அருகாமையில் உள்ள பள்ளிகள், வணிக கடைகள் முக்கிய சாலைகள் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.