கேஸ் விலை குறைப்பு தேர்தலுக்கான அறிகுறி – ப.சிதம்பரம் விமர்சனம்
டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படும். இதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்று நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஒருபக்கம் பாஜகவினர் வரவேற்பு அளித்து வரும் நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளது என்பது வேடிக்கையாக உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறி விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில், சமையல் சிலிண்டர் விலையை குறைத்திருப்பதே தேர்தல் வருவதற்கான அறிகுறி என காங்கிரசின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரை எக்ஸ் தளம் பதிவில், தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?, சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி! ரூ1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு என கிண்டலடித்துள்ளார்.