திமுக ஆட்சி அமைந்தவுடன் குப்பை கொட்டக் கட்டணம் ரத்து -ஸ்டாலின்

Default Image
பகல்கொள்ளை அடிக்கும் ‘குப்பைக் கொட்ட கட்டணம்’ என்ற அறிவிப்பை  உடனே திரும்பப்பெற வேண்டும்என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம், 2021 ஜனவரி முதல் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்- அதாவது குப்பை கொட்டக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ள அ.தி.மு.க அரசுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“குப்பை கொட்டக் கட்டணம்” என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள கட்டணங்கள், கொரோனா பேரிடரில் சிக்கிய மக்கள், அதன் அவதிகளில் இருந்து மீள வகையறியாது தவித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் அடிவயிற்றில் சுக்குமாந்தடியினால் சுழற்றித் தாக்குதல் தொடுத்திருக்கிறது. கொரோனாவில் மின்கட்டண வசூல், கொரோனாவில் சொத்து வரிக்கு அபராதம், இப்போது அதே கொரோனாவில் குப்பை கொட்டக் கட்டணம்- என அ.தி.மு.க. அரசின் நிர்வாக அலங்கோலங்கள் அடுத்தடுத்து வந்து படமெடுத்தாடி சந்தி சிரிக்க வைக்கிறது.
எனவே, சென்னை மாநகர மக்களுக்கும்- சிறு குறு நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கும்- திறந்த வழி பாட்டுத்தலங்களின் விழாக்களுக்கும் மற்றும் கொண்டாட்டங்களுக்கும் விரோதமான அ.தி.மு.க. அரசின் இந்த “குப்பை கொட்டக் கட்டணம்” என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற முதலமைச்சர் திரு. பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு வேளை முதலமைச்சரின் உத்தரவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி கட்டுப்படா விட்டால், மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், இந்தக் குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும்! சென்னை மாநகராட்சியின் நிதி முறைகேடு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தவறு செய்தோர் யாராக இருந்தாலும் தக்கபடி தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்