கஞ்சா வழக்கு : யூ-டியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது!
தேனியில் கைது செய்யும் போது கஞ்சா வைத்திருந்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னை : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பல்வேறு மாவட்டங்களில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யும் போது அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவதூறு வழக்குகள், கஞ்சா வழக்கு என பல்வேறு வழக்குகள் பதியப்பட்டதால், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது. அண்மையில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியே வந்தார். தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் பதிவு செய்த கஞ்சா வழக்கு தேனி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணைக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதனால், சவுக்கு சங்கர் மீது, தேனி சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை அடுத்து சென்னையில் வைத்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு சவுக்கு சங்கர் தேனி அழைத்து செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.