நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது நிகழ்த்தப்பட்ட சாதிய ரீதியிலான தாக்குதலை தொடர்ந்து, இன்று மீண்டும் அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 2023ஆம் ஆண்டு பள்ளியில் படித்து வந்த சின்னதுரையை வேறு சமுதாய மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் பழகிய சிலர், அவரை தனியாக வரவழைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சின்னதுரை ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த மாணவன் சின்னதுரையிடம் கிரிண்டர் என்கிற செயலி மூலம் பழகி, ரெட்டியார்பட்டி மலைப்பகுதி அருகே வரவழைத்து அவரின் மொபைலை பறித்து 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
தற்பொழுது, படுகாயமடைந்த மாணவன் சின்னதுரை தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து வந்து சின்னத்துரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் கிரிண்டர் ஆப்பை தடை செய்ய கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.