நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் கானா பாலா!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட பிரபல கானா பாடகர் கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6-ஆவது மண்டலம், 72-ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2011 தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்திருந்த நிலையில், தற்போது 3-வது முறையாக அதே வார்டில் போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கானா பாலா, கானா பாடல்கள் மூலம் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவரது அண்ணனான கபிலன் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கானா பாலா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள கானா பாலா, கவன ஈர்க்கும் வேட்பாளராக கருதப்படுகிறார்.
இதனிடையே,தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்ற நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது.