தனியார் மையத்திற்கு ஒப்படைக்கப்படும் விளையாட்டு திடல்கள்! கால்பந்து விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!
சென்னையில் உள்ள 9 கால்பந்து திடல்களை தனியார் மையக்கப்படவுள்ளதால் விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அதிலும், மிக முக்கியமான தீர்மானமாகப் பார்க்கப்படுவது என்னவென்றால், சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானம் தான்.
இது அங்குக் கால்பந்து பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் கால்பந்து வீரர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து அந்த கால்பந்து வீரர்கள் கூறுகையில், “நாங்கள் நீண்ட காலமாக இங்கு தான் கால்பந்து பயிற்சிகள், உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இப்படி தனியார் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டால் கால்பந்து வீரர்கள், இளைஞர்கள் என அனைவரும் கட்டணம் கொடுத்தே வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதே போலத் திறமை இருக்கும் ஏழை, எளிய வீரர்களின் விளையாட்டு வாய்ப்பை பறிக்கும் செயல்பாடாக உள்ளதால் இதைக் கண்டித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்”, எனக் கூறுகின்றனர்.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டுத் திடல்கள் மற்றும் 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இது முறைப்படி பராமரிக்கப்பட்டும் வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான் தற்போது இந்த விளையாட்டு திடல்களைத் தனியார் மையமாக்குவதற்குக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.