மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் இறுதி சடங்கு!
மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதிச்சடங்கு காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரான இடைசெவலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1922 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் பிறந்த கி.ராஜநாராயணன் அவர்கள் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். விவசாயம் பார்த்து வந்த இவர் அதன் பின் பல நூல்களை எழுதி, கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்பட கூடிய அளவிற்கு எழுத்தாளராக புகழ்பெற்றார்.கோபல்லபுரத்து கிராமம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமியக் கதைகள் என பல்வேறு இலக்கியங்களை இயக்கியுள்ளார்.
மேலும், தமிழக அரசு மற்றும் கனடா நாட்டின் விருதுகளை பெற்ற இவர், புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவில் வயது முதிர்வு காரணமாக இவர் காலமானார். இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் இவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இதனை அடுத்து புதுச்சேரியிலிருந்து இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு எழுத்தாளர்கள் அஞ்சலி செலுத்திய பின், அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் தமிழக அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரில் வைத்து நடைபெறும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.