சென்னை மெரினா முதல் கோவளம் வரை.. ரூ.100 கோடியில் அசத்தல் திட்டம் – தமிழக அரசு
மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கிமீ நீள கடற்கரையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.100 கோடியில் திட்டம்.
சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கி.மீ நீள கடற்பகுதியை புத்தாக்கம் செய்ய ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் கடற்கரையின் அடிப்படை வசதி மேம்படுத்துதல், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த வசதி செய்தல் ஆகியவை அடங்கும். கடற்கரையோர சுற்றுச்சூழலை பாதுகாத்தல், நடைபாதைகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மெரினா முதல் கோவளம் வரை கடற்கரை பகுதியை மறுசீரமைக்க 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டுவசதி செயலாளர் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை கடற்கரை பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்தில் சிறப்பு நோக்க நிறுவனம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.