Friends Of Policeக்கு தடை!- எஸ்.பி அதிரடி
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது.
மேலும் நடைபெற்று வரும் இவ்வழக்கானது சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் காவல்துறையில் காவலர்களுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்கிற ஒரு அமைப்பு உள்ளது.
இவர்கள் எல்லாம் காவலர்கள் கீழ் பணி செய்வார்கள். சாத்தான்குளம் கொலை வழக்கில் காவலர்களுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு இருக்க பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை தடை செய்ய வேண்டும் என்று குரல் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன. இந்நிகழ்வினைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.
பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு பதிலாக ஊர்காவல் படையை பயன்படுத்திக்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடன் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். அவ்வாறு விழுப்புரம் மாவட்டத்தை தொடர்ந்து, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்போது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.