இலவச வேட்டி, சேலை – ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!
பொங்கல் வேட்டி சேலை திட்டத்திற்காக உற்பத்தி செய்ய அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.
2024-ஆம் ஆண்டிற்கான பொங்கலையொட்டி வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய முன்பணமாக ரூ.200 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நூல்களை கொள்முதல் செய்யும் பொருட்டு ஒப்பந்தப்புள்ளி ஏற்கும் நிலைக்குழுவையும் அமைத்துள்ளது தமிழக அரசு. இதனிடையே, பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசால் 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து வருவாய்த்துறை கொள்முதல் செய்து செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக 2022-23ம் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.