இலவச மின்சாரம்.. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் – அமைச்சர் செந்தில் பாலாஜி
இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை வேண்டாம் என நினைப்பவர்கள் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரலாம் என தகவல்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, பயன்படுத்து யூனிட் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் மாற்றப்படும். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அதை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம். இருந்தாலும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் விசைத் தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை வேண்டாம் என நினைப்பவர்கள் கணக்கீட்டாளர் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.