செங்கோட்டையன் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு! என்ன நடக்கிறது அதிமுகவில்?

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு தற்போது கூடுதலாக 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Sengottaiyan - Edappadi palanisamy

கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில் பல்வேறு முணுமுணுப்புக்கள் உருவாக தொடங்கிய இந்த நேரத்தில், செங்கோட்டையன் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு மேலும் பேசுபொருளாகியுள்ளது.

பாராட்டு விழா :

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அன்று அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட விவசாய கூட்டமைப்புகள் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் அப்பகுதி கோபி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.

திட்டம் பற்றி..,

அத்திக்கடவு அவினாசி திட்டமானது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது ரூ.1,652 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பவானி ஆற்றில் இருந்து உபரியாக வெளியாகும் நீர் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறண்ட குளங்கள் நீர்நிலைப் பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டமாகும். இத்திட்டத்திற்கான பணியை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் கூட்டமைப்பு தான் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. எனவே, அதில் அரசியல் சார்பு இருக்க வேண்டாம் என அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை பதிவிடவில்லை என கூறப்படுகிறது

செங்கோட்டையன் அதிருப்தி :

இந்த விழாவுக்கான அழைப்புகளில் தங்கள் தலைவர்கள் படமான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை. விழாவுக்கு 3 நாட்கள் முன்னர் தான் எனக்கு அழைப்பிதழ் கொடுத்தார்கள். முன்னரே கூறியிருந்தால் நான் எனது கருத்துக்களை அப்போதே கூறியிருப்பேன். நான் விழாவை புறக்கணிக்கவில்லை, என் உணர்வுகளை வெளிப்படுத்தி இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என தனது தரப்பு விளக்கத்தை செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜெயக்குமார் விளக்கம் :

இப்படியான சூழலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இதே பதிலை சொன்னார். அது அரசியல் சார்பு நிகழ்ச்சி அல்ல என்பதால், எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் படங்கள் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அனைத்து அரசியல் கட்சித் விவசாய கூட்டமைப்பு தலைவர்களும் கலந்து கொண்டதால் யாருடைய படங்களும் இடம்பெறவில்லை என அவரும் குறிப்பிட்டார்.

போலீஸ் பாதுகாப்பு  :

இந்நிலையில் இந்த சலசலப்பு நிலவி இருக்கும் போது தான், கோபி பகுதியில் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு வழக்கமாக இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் நேற்று அப்பகுதி எஸ்ஐ தலைமையில் கூடுதலாக நான்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய சூழலில் திடீரென இந்த பாதுகாப்பு ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

விளக்கம் :

இது தொடர்பாக அதிமுக தரப்பு கூறுகையில், கூடுதல் பாதுகாப்பு வேண்டுமென்று செங்கோட்டையன் கூறவில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் செங்கோட்டையன் வீட்டின் முன்பு அவர்களாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என கூறியுள்ளனர்.

செங்கோட்டையன் – இபிஎஸ்?

இந்த சலசலப்புகள் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்தில் (BBC) வெளியான தகவலின் படி, செங்கோட்டையன் பரிந்துரைத்த சிலரை எடப்பாடி பழனிச்சாமி அதிமுக நிர்வாகிகளாக நியமிக்கவில்லை.  புதிய நிர்வாகிகள் நியமிப்பதிலும் செங்கோட்டையனை ஒதுக்கி வைப்பதாகவும் அவர் நினைத்ததால் தற்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்று அதிமுகவை சேர்ந்த நபர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB