“தவெக-வில் பதவிக்கு காசு வாங்குறாங்க., ஆதாரம் இருக்கு” முன்னாள் பிரமுகர் பகீர் பேட்டி!
தவெக-வில் மாவட்ட செயலாளர் முதல் மற்ற பதவிகளுக்கும் காசு வாங்குகிறார்கள் என தவெக முன்னாள் பிரமுகர் ஆரணி ஹாரிஸ் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு இதுவரை 5 கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்துவிட்டார். இதில் பொறுப்பு அறிவிக்கப்படாத தவெக பிரமுகர்கள் கட்சி தலைமை பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே திருவண்ணாமலையில் மாவட்ட செயலாளர் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆரணி ஹரிஷ் என்பவர், தவெகவில் ஜாதி, பணம், பொதுச்செயலாளர் ஆனந்திற்கு விசுவாசி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் தான் தவெக-வில் பொறுப்பு வழங்கப்படுகிறது என பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். இதற்கு திருவண்ணாமலை (ஆரணி) மாவட்ட செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,அப்படியெல்லாம் இல்லை, நானும் தலித் சமூகத்தை சேர்ந்தவன் தான். பணம் எல்லாம் யாரும் கொடுக்கவில்லை என விளக்கம் அளித்தார். மேலும் திருவண்ணாமலையில் நியமிக்கப்பட்ட 4 மாவட்ட செயலாளர்களில் 2 பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் என விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், மீண்டும் தவெக முன்னாள் பிரமுகர் ஆரணி ஹரிஷ் செய்தியாளர்களை சந்தித்து, மாவட்ட செயலாளர் பதவி உட்பட மற்ற பதவிகளுக்கும் தவெக தலைமையில் காசு வாங்குகிறார்கள் என மீண்டும் குற்றம்சாட்டினார். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்குறது என்றும் கூறினார்.
சாதி, பணம், ஆனந்த் சாருக்கு விசுவாசி
அவர் கூறுகையில், ” உங்களை (தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்) தேடி உறுப்பினர் வந்தால் ஏன் என்று கேக்கணும், என் முகத்தை பார்த்தவுடன் என்னுடன் வந்தவர்களையும் திருப்பி அனுப்புகிறார். என்னை பார்த்து பேச மறுக்கிறார். நான் இப்போதும் சொல்கிறேன். இங்கு (தவெக) சாதி, பணம், ஆனந்த் சாருக்கு விசுவாசி என்பதை பொறுத்து தான் பதவி கொடுக்கிறாங்க. காசு வாங்குவதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கு .
ஆரணி பகுதி மாவட்ட செயலாளர் சத்யா, அடுத்தகட்ட பதவிக்கு காசு வாங்குறார். மேலிடத்தில் பொதுச்செயலாளர் ஆனந்தும் காசு வாங்குகிறார். ஒரு ஒரு பொறுப்புக்கும் இவளோ பணம் என லிஸ்ட் அனுப்பிருக்காங்க. உறுப்பினர் அட்டைக்கு காசு வாங்குகிறார் என்றால் அதற்கு, தலைவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கணும். மாவட்ட செயலாளர் பதவிக்கு காசு வாங்குறாங்க.
ஒருத்தருக்கு 500 ருபாய் தரணும்?
என்கிட்ட 200 ஃபார்ம் கொடுத்தாங்க. அதனை நான் என்னுடன் இருந்த தவெக உறுப்பினர்களுக்கு கொடுத்துவிட்டேன். அப்போது எனக்கு பணம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அதற்கு அடுத்து ஒருத்தருக்கு 500 ருபாய் தரணும்னு சொல்றாங்க. அப்படியென்றால் ஆலோசனை கூட்டம் கூட்டணும். அதில் கலந்து ஆலோசித்து தானே காசு வாங்குவது பற்றி முடிவு செய்யணும். தலைவர் (விஜய்) தெளிவா சொல்லிருக்கார். பதவிக்கு காசு கொடுப்பதும் தவறு. வாங்குவதும் தவறு என சொல்லிட்டார். மாவட்ட செயலாளரிடம் நான் பேச போனால், ரூம் பூட்டிவிடுகிறார். போன் ஆஃப் பண்ண சொல்றார். எங்க டீம்ல எல்லாரையும் கூப்பிட்டு தானே பேசணும். ஆனால் இரண்டு இரண்டு பேரா கூப்டு பேசுறார். இதுபத்தி தலைமை கேக்கணும். இல்லை எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், போலீஸ் அனுமதி பெற்று ஆரணியில் உண்ணாவிரதம் இருப்பேன். ” என ஆரணி ஹரிஷ் கூறினார்.