பதவி பெற்றுக் கொடுத்தவர் காலை வாரும் கலையை கற்றவர்..! இபிஎஸ்க்கு பாஜக பதிலடி..!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி கடுமையாக சாடியுள்ளார்.
திமுக சொத்து பட்டியல் :
சென்னையில் உள்ள கமலாலயத்தில் நேற்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதே சமயம் அனைத்து கட்சி ஊழல்களையும் வெளியிடுவேன் என அண்ணாமலை பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
அனைத்தையும் சந்திக்க தயார் :
இந்நிலையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் பேட்டியில், அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் என்றே அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அதிமுக என்று அவர் குறிப்பிட்டு கூறவில்லை. அவர் அதிமுக சொத்துப்பட்டியல் என்று முன்னாள் அமைச்சர்கள் அல்லது அதிமுக சார்ந்தவர்களின் சொத்துப்படியலோ வெளியிட்டாள் அனைத்தையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், எதை கண்டும் பயப்பட மாட்டேன் என்றும் கூறினார்.
அண்ணாமலை பற்றி கேட்காதீர்கள் :
இதனையடுத்து, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை விமர்சித்திருந்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் அண்ணாமலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி, ஏன் அவரை பற்றி பேசுகிறீர்கள், இப்படி பேசி பேசியே அவர் பெரியவர் ஆகிவிட்டார் என்றும் நான் கட்சியில் 50 வருடமாக இருக்கிறேன், அவர் இப்படிலாம் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகவேண்டும் என்று நினைக்கிறார், முதிர்ந்த அரசியல் தலைவர்களை பற்றி கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன், அண்ணாமலையை பற்றி தயவுசெய்து கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
காலை வாரும் கலை :
எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்திற்கு பாஜகவின் மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம் என்றும் அடுத்தவர் காலில் விழுந்து பதவி பெற்று, அதை பெற்றுக் கொடுத்தவரின் காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என பதிவிட்டுள்ளார். இதனால் கட்சிகளின் கூட்டணிக்கு விரிசல் விழுவதற்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்.
அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம்…
— Amar Prasad Reddy (@amarprasadreddy) April 16, 2023