பத்தாம் வகுப்புப் அனைத்துத் தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் முன்னாள் எம்எல்ஏ தங்கம் தென்னரசு அறிக்கை.!

Default Image

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பதிவு செய்திருந்த அனைத்துத் தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று திமுக முன்னாள் எம் எல் ஏ தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கி நடைபெற வேண்டிய 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள், ‘கொரோனா’ நோய்த் தொற்றின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் கழகத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி அவர்களது தொடர் அழுத்தத்தாலும், கழகத்தின் இளைஞரணி மற்றும் மாணவரணித் தோழர்களின் முன்னெடுப்புகளாலும், அதனைத் தொடர்ந்த உயர்நீதிமன்றத் தலையீட்டினாலும் ரத்து செய்யப்பட்டது.

மாநிலம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும்போது, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதவிருந்த ஏறத்தாழ 9.56 லட்சம் மாணவர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குள்ளாவதைச் சுட்டிக்காட்டி தமிழகமெங்கும் எழுந்த எதிர்ப்புக் குரலுக்கு, இறுதியில் தமிழக அரசு பணிந்து தேர்வு நடத்தும் தனது முடிவைக் கைவிட்டு, தேர்வெழுத இருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

ஆயினும் கடந்த 10.08.2020 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் துவங்கும் முன்னர் பள்ளிக் கல்வித்துறையில் கீழ் இயங்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,687 பள்ளிகளிலிருந்து 9,45,006 மாணாக்கர்கள் மற்றும் 10,742 தனித்தேர்வாளர்கள் என மொத்தம் 9,55,748 பேர் புதிய பாடத்திட்டத்தின்படி எழுத இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இவையன்னியில், ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத 23,581 தேர்வர்கள், தற்போது பழைய பாடத்திட்டத்திலேயே பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினைத் தனித்தேர்வராக எழுதவிருப்பதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட அன்று, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட விவரக்குறிப்பில் 100% தேர்ச்சி சதவிகிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தேர்ச்சி பெற்ற மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 9,39,829 மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

காரணம் என்னவெனில், பள்ளி மாணாக்கராகவே பதிவு செய்திருந்த மாணவர்களில் சுமார் 5,248 மாணவர்கள் தேர்ச்சியின்றி விடுபட்டுப்போயிருந்தனர். பள்ளிக் கல்வித் துறையின் இத்தகைய வழக்கமான குழப்ப அறிக்கையினால் பல முனைகளிலும் இருந்து எழுந்த வினாக்களில் இருந்து தப்பிக்க, அன்று மாலையே கூடுதல் விவர அறிக்கையை தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டு, விடுபட்டுப் போயிருந்த மாணவர்கள் தேர்ச்சி பெறாததற்கான காரணங்களைப் பட்டியலிட்டு, இறுதியாக 9,39,829 மாணாக்கரே தேர்ச்சி பெற்றதாக ஒருவழியாக அறிவித்தது.

இது ஒருபுறம் இருக்க, தனித்தேர்வர்களாகப் புதுப் பாடத்திட்டத்தின்படி எழுத இருந்த 10,742 பேர் மற்றும் பழைய பாடத்திட்டத்தின்படி ஏற்கனவே தேர்வெழுதி தேர்வு பெறாது மறுபடி அதே பாடத்திட்டத்தில் தேர்வெழுதக் காத்திருந்த 23,581 பேரின் தேர்ச்சி நிலை குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிடவில்லை. இவ்வகையில் தமிழகத்திலும், புதுச்சேரி மாநிலத்திலும் சேர்த்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருந்த மொத்தம் 34,323 தனித்தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது. இவர்களுக்கும் பள்ளி மாணாக்கர்களைப் போன்றே தேர்ச்சி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை எல்லா மட்டங்களிலும் வலுவாக எழுந்துள்ள போதும், பள்ளிக் கல்வித்துறை இன்னும் வாய்மூடி மெளனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே தவிர, 34,323 மாணவர்களின் எதிர்காலம் பாழாகி விடுமே என்ற கவலை, அத்துறைக்கு கிஞ்சிற்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த ஆண்டு அவர்கள் தேர்வு எழுத முடியாத சூழலில், மற்ற மாணவர்களைப் போல தேர்ச்சியும் பெற முடியாது என்ற நிலை அவர்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும் கடும் மன அழுத்தத்தை உருவாக்கி இருக்கிறது. அவர்களின் கடந்த ஓராண்டு கால முயற்சிகள் பலனின்றிப் போய், அவர்கள் மேலும் ஓராண்டு காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு தடைபடுவதோடு, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய விரும்புவோரின் மூப்புரிமையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே தமிழக அரசும், குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் உடனடியாக இதில் தலையிட்டு தமிழகத்திலும், புதுவையிலும் பதிவு செய்திருந்த தனித்தேர்வர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்