முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றம்..!
கடந்த 21-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து,தாக்கப்பட்ட திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து,கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்பின்னர், மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.