முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் காலமானார்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான பி.சங்கர் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் 1 முதல் 2002 ஜூன் 6 வரை தமிழக அரசின் தலைமைச் செயலராக பணியாற்றியவர் தான் பி.சங்கர். தொடக்கத்தில் செய்யார், திருப்பத்துார் உதவி கலெக்டராக பணியாற்றி வந்தவர், அதன் பிறகு 2001-ம் ஆண்டு தலைமைச் செயலராக பணியாற்றினார்.
அதன்பிறகு, 2002-ல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் சென்னை சேத்துபட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு தனது 82 வயதில் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை 3:00 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும், ஷங்கரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், 1966-ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான திரு. பி.சங்கர் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.செய்யாறு உதவி ஆட்சியராக தனது இந்திய ஆட்சிப் பணியைத் துவங்கிய திரு. சங்கர் அவர்கள் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளிலும், ஒன்றிய அரசின் செயலாளர் பதவிகளிலும், ஒன்றிய திட்டக்குழுவின் செயலாளர் பதவியிலும், இறுதியாக ஒன்றிய விழிப்புணர்வு ஆணையத்தின் தலைவராகவும் திறம்பட நேர்மையுடன் பணியாற்றியவர்.
திரு. பி.சங்கர் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவருடன் பணியாற்றிய சக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், 1966ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான திரு. பி.சங்கர் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
திரு. பி.சங்கர் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்”… pic.twitter.com/2DB7kvAfgV
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 3, 2024