திமுக அமைச்சர்களை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்..!
ஒரு இளைஞனை விளையாட்டு துறை அமைச்சர் ஆகியுள்ளது உண்மையில் பாராட்டுதலுக்குரியது என செல்லூர் ராஜு பாராட்டு.
மதுரையில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் 6 ஆவது அனைத்து இந்திய கபடி போட்டி நடைபெற்றது. இதற்கான துவக்கவிழா நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, மதுரையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த கபடி போட்டியில் அகில இந்திய அளவில் சிறப்பாக விளையாடிய 18 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 252 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை வைத்து அணியை உருவாக்கி, இந்த அணி வரும் பிப்ரவரியில் ஈரானில் நடைபெற உள்ள உலக கபடி போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. இதற்கு உதவிய தமிழக நிதி அமைச்சர் அவர்களை பாராட்ட வேண்டும்.
அரசியல் வேறு கொள்கை வேறு விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். தற்போது தமிழக அரசு கூடுதலாக விளையாட்டு துறையில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஒரு இளைஞனை விளையாட்டு துறை அமைச்சர் ஆகியுள்ளது உண்மையில் பாராட்டுதலுக்குரியது. இதில் அரசியல் கலக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.