திமுகவின் முடிவுரைக்கு முடிவு எழுதும் விதமாக இடைத்தேர்தல் முடிவுகள் வரும்.! ஜெயக்குமார் பேட்டி.!
திமுகவின் முடிவுரைக்கு முடிவு எழுதும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டி.
வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் , திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக இவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதே போல, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.
ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று தமிழக தேர்தல் ஆணையரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றை அளித்துள்ளார். அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், திமுக அரசு நிர்வாக இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி குறுக்கு வழியில் போலியான வெற்றியை பெற முயன்று வருகிறது. மேலும், ஜனநாயக விரோத செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் பேசிய ஆடியோ கூட இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. இதனையெல்லாம் குறிப்பிட்டு தேர்தலை முறையாக நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவின் முடிவுரைக்கு முடிவு எழுதும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும். என்று குறிப்பிட்ட அவர் அம்மா திட்டங்கள் மூடி மறைக்கப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 அதிமுக வெல்லும். வரும் 7ஆம் தேதிவரை கால அவகாசம் இருக்கிறது ஆகவே விரைவில் இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிப்போம். திமுக போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கிறது அதனை தடுக்கவும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.