விஜய்க்கு அதிமுகவில் ஆதரவு கருத்து.! முன்னாள் அமைச்சர்கள் கூறியதென்ன.?
திமுகவை நேரடியாக விமர்சித்து பேசிய தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.
சென்னை : நேற்று நடைபெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு பற்றிய செய்திதான் தற்போது வரை தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. திமுகவினர் பற்றி நேரடியாக விமர்சனம் செய்ததால், அங்கிருந்து எதிர்ப்பு கருத்துக்களும், மற்ற கட்சியில் இருந்து ஆதரவு எதிர்ப்பு பலவகையான கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் பேசி விமர்சனம் செய்துவிட்டு அதிமுக பற்றி எந்த விமர்சனமும் முன்வைக்காமல் இருந்துள்ளார். அதுபற்றி கூறிய திமுக அமைச்சர் ஒருவரிடம் இருந்து ‘அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க போகிறார் ‘ என்று விமர்சனமும் எழுந்தன.
இதனை அடுத்து இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ” நேற்று நடைபெற்ற மாநாடு என்பது விஜய் கட்சியின் சிறந்த துவக்கம், கிராண்ட் ஓபன்-ஆக (Grand Open) அமைந்துள்ளது. அவர் நேற்று தனது கட்சியின் கொள்கை பற்றி கூறியுள்ளார். கட்சி கொடி பற்றி கூறியுள்ளார். அவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அதிமுக தலைவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் இதனை முதன் முதலாக தமிழக மக்களுக்கு வழங்கியவர்.
நேற்று நடைபெற்ற மாநாட்டிற்கு அதிகளவில் இளைஞர்கள் வந்திருந்தார்கள். ஆளும் அரசு மீதான வெறுப்பு காரணமாகவே இவ்வளவு இளைஞர் பட்டாளம் விஜய் மாநாட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் அதிமுகவுக்கு எள் அளவும் பாதிப்பில்லை. ஏனென்றால் நாங்கள் இப்போது ஆளும் அரசாக இல்லை.” என ஆதரவு நிலைபாட்டிலேயே தனது கருத்தை முன்வைத்தார் ஆர்.பி.உதயகுமார்.
அதே போல, அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் விருதுநகரில் கூறுகையில், “திமுக தான் எங்கள் முதல் எதிரி என வீஜய் பேசியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். கொள்கை நிலைப்பாட்டை வெளிப்படுத்திய முதல் பேச்சிலேயே திராவிட மாடலை எதிர்த்து குரல் கொடுத்தது மிக முக்கியம். அதிமுகவுடன் உடன்பாடு இல்லாத கொள்கை எதுவும் தவெகவில் இல்லை. அதனால் நாங்கள் அதனை வரவேற்கிறோம. ” என்று கூறினார்.