தமிழ்நாட்டிற்காக அமெரிக்காவில் குவியும் முதலீடுகள்… நோக்கியா முதல் பேபால் வரை.!
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, பேபால், மைக்ரோசிப் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
தமிழ்நாடு தொழில்வளர்ச்சியில் முன்னேற்றம் காண, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
முன்னதாக, துபாய், சிங்கப்பூர், ஜப்பான் , பிரான்ஸ் என பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து தமிழ்நாட்டில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது போல, இந்த முறை முதலமைச்சர் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு அமெரிக்கா புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாலை (இந்திய நேரப்படி) அமெரிக்கா சான் பிராசிஸ்கோ சென்றடைந்தார். அங்கு அவருக்கு அங்குள்ள அமெரிக்க தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சான் பிராசிஸ்க்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
- நோக்கியா நிறுவனம் தமிழகத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.450 கோடி அளவில் முதலீடு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- ஈல்டு இன்ஜினியரிங் சிஸ்டம் (Yield Engineering Systems) நிறுவனம் தமிழகத்தில் ரூ.150 கோடி அளவில் முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- பேபால் (PayPal) நிறுவனம் தமிழ்நாட்டில் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் அளவுக்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- மைக்ரோசிப் (Microchip) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.250 கோடி அளவில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
- இன்பினிக்ஸ் (Infinx ) ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.50 கோடி முதலீட்டில் 700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- அப்ளைடு மெடீரியல்ஸ் (Applied Materials ) நிறுவனம் தமிழ்நாட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் சென்னை , கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.900 கோடி முதலீட்டில் சுமார் 4,100 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.