கள்ளக்குறிச்சி விவகாரம்; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை – அமைச்சர்
மாணவி மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த சில நாட்களாக கலவரமாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கள்ளகுறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா இன்று கைது செய்யப்ட்டனர்.
நேற்று பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 10 க்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சலிங் கொடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும். அரசின் அனுமதியின்றி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கக்கூடாது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தால் கலவரம் நடந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெற்றோர் உணர்வை புரிந்துகொண்ட தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்வும் குறிப்பிட்டார்.
மேலும், இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன் என்றும் கூறினார். கள்ளக்குறிச்சி அருகே நேற்று நடந்த கனியாமூர் தனியார் சக்தி மெட்ரிக் பள்ளியில் அமைச்சர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வே வேலு இன்று ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.