லஞ்சம் கொடுக்காத விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வன அதிகாரி சஸ்பென்ட்
லஞ்சம் கொடுக்காத விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனத்துறை அதிகாரி அன்பழகன் வன அலுவலர் முருகனால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ராமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் காட்டு விலங்குகள் விளை நிலங்களுக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பள்ளம் தோண்ட வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்காக வனத்துறை பணியாளர் விவசாயிகளிடம் 5 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் விவசாயிகள் தங்களால் முடிந்த மூன்று லட்சத்தை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீதி பணத்தை தருமாறு கேட்டு துப்பாக்கியை காட்டி விவசாயிகளை மிரட்டியதாக வனத்துறை அதிகாரி மீது விவசாயிகள் தமிழக முதல்வர் மற்றும் சேலம் மாவட்ட வன அலுவலர் ஆகியோரிடம் கடந்த 26ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் வனத்துறை அதிகாரி அன்பழகனை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.