இதற்கு “கிறிஸ்தவர்” ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் – விசிக தலைவர்

Default Image

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதிருந்தார்.

அதில், குடியரசு தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வரும் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். மறுபக்கம், குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜக, குழு ஒன்றை அமைத்திருந்தது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சார்ந்த எவரும் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை. இந்திய மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறித்தவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. தற்போதைய பிரதமர் மோடி அமைச்சரவையில் கிறித்தவர் எவரும் இடம்பெறாத நிலை இருந்தது இன்றி தெரிவித்துள்ளார்.

அதைப் பலரும் சுட்டிக் காட்டிய பிறகு அண்மையில் நடைபெற்ற விரிவாக்கத்தின் போது தான் கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சட்டமன்றங்களிலும் போதுமான பிரதிநிதித்துவம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அவர்களது மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை.

தற்போதைய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் 5.2%, கிறித்தவர் உள்ளிட்ட பிற சிறுபான்மையினர் 4% மட்டுமே உள்ளனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். கடந்த எட்டாண்டுகால பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றிக் கிறித்தவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரப்பட்டு எவ்வித ஆதாரமும் இன்றி கிறித்தவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். எனினும், இந்தியாவின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கிறித்தவ சமூகம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மகத்தானது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையில் இந்தியாவில் உள்ள கிறித்தவர்களின் எண்ணிக்கை 2.78 கோடி ஆகும். இவ்வளவு பெரிய எண்ணிக்கை கொண்ட ஒரு சமூகம் இப்படி புறக்கணிக்கப்படுவதும் தாக்குதலுக்குள்ளாவதும் இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகாது.

எனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ‘கிறித்தவர் ஒருவரை’ நிறுத்த வேண்டும். இது பாதுகாப்பற்ற நிலையில், எந்நேரமும் அச்சத்தில் உழலும் கிறித்தவ மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும், வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும் அமையும். இதனால், எதிர்வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறித்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்