மூன்றாவது முறையாக கோவை விவசாய நிலத்தில் 15அடி நீள ராஜநாகம்.! பதற வைக்கும் புகைப்படங்கள்.!
கோவையில் உள்ள விவசாய நிலத்திலிருந்து மூன்றாவது முறையாக 15அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த நரசீபுரம் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளதாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலை தொடர்ந்து வனச்சரகர் ஆரோக்கியசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று, பாம்பு பிடிக்கும் நபர்களின் உதவியுடன் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி வரை நீளமுள்ள பெண் ராஜநாகத்தை பத்திரமாக மீட்டனர்.
ஏற்கனவே நரசீபுரம் விவசாய நிலத்திலிருந்து இரண்டு முறை ராஜநாகம் பிடிக்கப்பட்டு வைதேகி நீர் வீழ்ச்சி அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் ராஜநாகம் நரசீபுரம் விவசாய நிலத்தில் வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது அந்த ராஜநாகத்திற்கு மக்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால், 15அடி நீள ராஜநாகத்தின் உடல்நிலையை பரிசோதித்த பின்னர், அதனை வனத்துறையினர் சிறுவாணி அடர்வனப் பகுதிக்கு சென்று விடுவித்துள்ளனர்.