மதுப்பிரியர்கள் கவனத்திற்கு…இனி பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் – தமிழக அரசு!
நீலகிரி மாவட்டத்தில்,சுற்றுலாப் பயணிகள் மது அருந்தி விட்டு காலி மதுப்பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும்,குறிப்பாக வனவிலங்குகளுக்கு காயம் ஏற்படுவதாவும் புகார் எழுந்த நிலையில்,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது,மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள்,கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 25க்குள் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.மீறினால்,மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில்,நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனி விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுப்பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்க டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.எனினும்,காலி மதுப்பாட்டிலை டாஸ்மாக் கடைகளில் திரும்ப கொடுத்து விட்டு கூடுதல் கட்டணமான ரூ.10-ஐ திரும்ப பெறுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,மதுப்பாட்டில்களில் இந்த பாட்டில் நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது என்ற முத்திரை இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.