கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்..! அமரர் அறை முன் உறவினர்கள் போராட்டம்..!
மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்தால் தான் மாணவியின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் போராட்டம்.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு (17) பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்த நிலையில், தவறான சிகிச்சை காரணமாக அறுவை சிகிச்சைக்கு பின் பிரியாவுக்கு ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதால் வலது கால் அகற்றப்பட்டது.
இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்த நிலையில், மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பிரியாவின் சகோதரர்கள் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்தால் தான் மாணவியின் உடலை வாங்குவோம் என அமரர் அறை முன்பு அமர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.