குட்நியூஸ்…உணவு தொடர்பான புகார்;72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு!
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி அண்மையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக உணவகங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வேளையில்,தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால்,தமிழகத்தில் ஷவர்மாவை விற்க தேவையான அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு வசதிகள் இல்லாத கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்,ஷவர்மா போன்ற உணவுகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில தினங்களுக்கு முன்னர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில்,பொதுமக்களிடமிருந்து உணவு தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது காலம் தாழ்த்தாமல் 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாவது:
“அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் உரிமம் பெறுவதை உறுதி செய்யவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமம் புதுப்பிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.அனைத்து வகை இறைச்சி, மீன், முட்டை, பால்பொருட்கள் ஆகிய உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக,அனைத்து நியமன அலுவலர்களும் பொதுமக்களிடமிருந்து உணவு தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது காலம் தாழ்த்தாமல் 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம் குறித்து புகார் அளித்தவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.