“விரல் ரேகை தெளிவின்றி இருந்தாலும் ரேசனில் உணவுப்பொருள் வழங்க வேண்டும்” – உணவுத்துறை அதிரடி உத்தரவு..!
ரேசன் அட்டைதாரர்கள் உணவுப்பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேசன் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி உணவு பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி,
- கைவிரல் ரேகை சரிபார்த்து அதனடிப்படையில் இன்றியமையாப் உணவுப்பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளும் போது கைவிரல்கள் ரேகைகள் தெளிவில்லாமல் இருந்தாலோ அல்லது பயோமெட்ரிக்தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவோ இருந்தாலும் உரிய ஆவணங்களை சரிபார்த்து,உண்மையான அட்டைதார்களுக்கு உணவுப்பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே அநேக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
- இது தொடர்பாக குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு கூடுதலாக கீழ்காணும் அடுத்த நிலை, படிப்படியான, தெளிவான, சுலபமான வழிகாட்டு முறைகள் வழங்கப்படுகின்றன. இவை மட்டுமே இனிவரும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
- நியாய விலைக்கடைகளுக்கு வருகைத் தரும் பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விரல் ரேகை தேய்மானம் அல்லது விற்பனை இயந்திரத்தில் இணைய இணைப்பில் தொழில் நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் மறுக்கப்படாமல் தொடர்ந்து விநியோகிக்கப்பட வேண்டும்.
- வயது முதிர்ந்த அல்லது மாற்றுத்திறனாளி அல்லது இதர அட்டைதாரர் நியாய விலைக்கடைக்கு அத்தியாவசியப் பொருள் பெற வருகைத் தரும் போது, முதற் கட்டமாக நட்பு முறையில் கனிவுடன் முகமலர்ச்சியோடு வரவேற்று அவரது குடும்ப அட்டையினை ஸ்கேன் செய்து விரல் ரேகை சரிபார்க்க வேண்டும்.
- விரல் ரேகை பதிவுகள் சரியாக உள்ள அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருள் உடனடியாக வழங்கப்படுகிறது. அதே போல் விரல் ரேகை தெளிவின்மை காரணமாக விரல் ரேகை படிப்பி முறை தோல்வி அடையும் பட்சத்திலும் (Failure of Bio Metric Authentication) அடுத்த கட்டமாக எவ்வித தடையுமின்றி உடனடியாக விநியோகம் மேற்கொள்ள வேண்டும்.
- வயது முதிர்ந்த மாற்று திறனாளியாக உள்ள அட்டைதாரர் கடைக்கு வருகைத் தர இயலாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக பொருள் பெற விரும்பி படிவம் பெற வருவாராயின் அவருக்கும் உடனடியாக இதர வழிமுறைகளின்படி பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் அவரிடம் proxy விண்ணப்ப படிவத்தைக் கொடுத்து அனுப்பலாம். 9. அடுத்த முறை வருகையில் அவர் proxy விண்ணப்ப படிவத்தை நிரப்பி கடைக்காரரிடம் கொடுக்கலாம் அல்லது மேலும் கால அவகாசம் கோரலாம்.
- இவ்வாறு விரல் ரேகை சரிபார்ப்பு இன்றி விநியோகம் மேற்கொள்ளப்படுவதனை ஒரு பதிவேட்டில் பதிந்து பொருள் பெற்று செல்பவரின் கையொப்பத்தினை அப்பதிவேட்டில் பெற வேண்டும். யார் பெற்றுச் சென்றுள்ளார் என்று தெரிந்து கொள்வதற்காகவும் பின்னர் தேவையான பொழுது சரிபார்ப்பதற்காகவும் இப்பதிவேட்டில் பதிவு செய்வது அவசியமாகிறது.
- அது குறித்து கள அலுவலர்கள் தனியே விசாரித்து கொள்ளலாம்.
- தொழில் நுட்ப காரணங்களால் AUA (ஆதார் சரிபார்க்கும் இணைப்பு கிடைக்க பெறாமை) வயது குறைந்தவர்கள் கூட ஆதார் இணைப்பு பெற இயலாத சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது. இதனால் பல குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நீண்ட வேளை நிற்க நேரிடுகிறது. அதனை தவிர்க்கும் பொருட்டு அரைமணி நேரம் வரையில் காத்திருந்தும் இணையதளத்தில் ஆதார் இணைப்பு பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், அத்தகைய தொழில்நுட்ப சிக்கல் சரியாகும் வரை இதர வழிமுறைகளின்படி அப்பொழுது பொருள் வாங்க வந்தவர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும்.
- விற்பனை முனைய இயந்திரத்தில் இவ்வாறு விரல் ரேகை படிப்பி சரிபார்ப்பு இல்லாது பட்டியிலிட்டு வழங்க உரிய வசதிகள் ஏற்கனவே உள்ளது. இந்த அறிவுரைகளை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும், கடைகள் தொடர்புடைய கண்காணிப்பு அலுவலர்களுக்கும் எடுத்து கூறி உண்மையான தேவையுள்ள வயதான மற்றும் மாற்றுத்திறனாளி அட்டைதார்களுக்கு உணவுப் பாதுகாப்பு உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக இக்காரணங்களை குறிப்பிட்டு வயதான / மாற்றுத்திறனாளி எவருமோ அல்லது அவரது பிரதிநிதியோ நியாப விலைக்கடைக்கு வருகை தரும் போது அவர்களுக்கான உணவுத் தேவை உடனடியாக வழங்குவது தொடர்புடைய அனைவரின் கடமையாகும் என்பதனை அன்புடன் நினைவூட்ட விழைகிறேன்.
- இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் ஐயம் இருப்பின் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டுவரலாம் அதுவரை அவ்வாறான ஐயத்தின் மாற்றுத்திறனாளிகள் நன்மை கருதி செயல்படுத்த வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.