செங்கோட்டையனின் ‘திடீர்’ டெல்லி பயணம்.! இபிஎஸ் ரியாக்சன் என்ன?
இபிஎஸ் டெல்லி பயணத்தை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளளார்.

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. யார் யார் எந்தெந்த கட்சி கூட்டணி என்ற பேச்சுக்கள் ஒரு புறம் இருக்க, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது நாளுக்கு நாள் பொதுவெளியில் வெளிப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான பனிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் சூழலில், தற்போது அது மேலும் தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணி வேண்டாம் என்று இருந்த இபிஎஸ், அண்மையில் அமித்ஷாவை சந்தித்தது செங்கோட்டையனின் மறைமுக அழுத்தமாக இருக்கக் கூடும் என கூறப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை அடுத்து தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார் என்றும், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவர் நேரம் கேட்டதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சேலத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், “அதுபற்றியெல்லாம் எனக்கு தெரியாது” என கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.
ஏற்கனவே, இபிஎஸ் பயணத்தை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நாயனார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்படுமா அல்லது வேறு ஏதேனும் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.