உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்! எச்சரிக்கை விடுத்த தூத்துக்குடி ஆட்சியர்!
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் விற்பனையாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி : உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டியாகத் தீபாவளி கருதப்படுகிறது. இந்த தீபாவளி திருநாளில், வெடி வெடிப்பதுடன், புத்தாடை, பலகாரங்கள் என அந்நாள் முழுவதுமே களைக்கட்டும் ஒரு விழாவாகவே தமிழகம் முழுவதுமே கொண்டாடப்பட்டுகிறது.
அப்படி தீபாவளியில் முக்கிய பங்காகப் பார்க்கப்படுவது இனிப்புகளும், பலகாரங்களும் தான். அதிலும், பலர் இந்த இனிப்புகள், பலகாரங்கள் என அனைத்தையும் பிரபல பரிட்சியமான கடைகளில் வாங்குவார்கள். உணவில் கலப்படம், தரமற்ற உணவு என இப்படி ஒரு சில காரணங்களுக்காகச் சமீபத்தில் தமிழகத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல வாங்கி உண்ணும் மக்களும், வாங்கும் போதே அதனது காலாவதி தேதி, உற்பத்தி தேதி என அனைத்தையும் பார்த்து வாங்க வேண்டும். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரான இளம் பகவத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் அனைத்தையும் நல்ல முறையில் தயாரிக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் தெரிவித்துள்ளது என்னவென்றால், “தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், சுகாதாரமான பாதுகாப்பான உணவுகளை மட்டுமே நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கட்டாயம் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்”, என ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.