சென்னைக்கு வெள்ள ஆபத்து: தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை -ராமதாஸ்
சென்னைக்கு வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்த சமயத்தில் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. பலர் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.இதனிடையே இந்த ஆண்டும்,சென்னை உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டி உள்ளது.இதனால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருவதால், சென்னையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ? என்ற அச்சமும், பதற்றமும் சென்னை மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. சென்னைக்கு உடனடியாக வெள்ள ஆபத்து இல்லை என அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும், இயற்கை எந்த நேரத்திலும் எத்தகைய விளைவை வேண்டுமானாலும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதை எதிர்கொள்ள அரசு எந்திரம் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகும் மழை நீடிக்கும்பட்சத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளின் கரைகளை ஒட்டிய பகுதிகளில் காவல்துறை, தீயவிப்புத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். சென்னை மற்றும் புறநகருக்கான மழை வாய்ப்புகள், ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு ஒருமுறை முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை வெளியிட வேண்டும். அதன்மூலம் மக்களை பதற்றமின்றி, அதேநேரத்தில் எந்த நிகழ்வுக்கும் தயார் நிலையில் அரசு வைத்திருக்க வேண்டும். பல இடங்களில் விஷமிகள் தங்களின் சுயநலனுக்காக ஏரிகளின் கரைகளை உடைக்கக்கூடும்; அதனால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அதைத் தடுக்கவும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.