12ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை!
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் 12 ம் தேதி வரை வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் 12 ம் தேதி வரை வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முதல் 12ம் தேதி வரை குமரிக்கடல், மன்னர் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் நாளை முதல் 12ம் தேதி வரை மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.