முதல் நாள் முதல் காட்சி: தலைவி படத்தில் இருந்து இந்த காட்சிகளை நீக்கவேண்டும் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

Default Image

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், எம்ஜிஆர் அவர்கள் அமைச்சர் பதவி கேட்பது போல் காட்சி வைத்துள்ளதை நீக்கவேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தல்.

சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தலைவி படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர்.

வரலாறு என்பது வரலாறாக தான் இருக்க வேண்டும். அதனை திருத்தி கூறுவது ஏற்க முடியாத ஒன்று. இப்படத்தை பார்க்கும்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல், அறிவு, விவேகம் மற்றும் ஆணாதிக்கம் உள்ள அரசியலில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் என கூறினார்.

அதே நேரத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்றைக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை என்றும் தலைவர் அண்ணாவுடன் அமைச்சர் பதவி கேட்கவில்லை, அண்ணாவாகவே கொடுத்த பதவி எனவும் கூறினார்.

ஆனால், இந்த திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் எம்ஜிஆர் அவர்கள் மறைந்த முன்னாள் கருணாநிதியிடம் அமைச்சர் பதவி கேட்பது போல் இருக்கும் காட்சி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்த ஜெயக்குமார், வரலாறு மறைக்கப்பட கூடாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எந்த காலத்திலும் எம்ஜிஆர் அவர்கள் சிறுமைப்படுத்தியதில்லை. ஆனால், இத்திரைப்படத்தில், படப்பிடிப்பு காட்சி ஒன்றில் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, ஒரு நாய்க்கும் வணக்கம் சொல்கிற மாதிரி ஒரு சித்தரிக்கப்பட்ட காட்சி பார்க்கும்போது, புரட்சி தலைவர், அம்மாவை அவமதிக்கிற ஒரு செயல், இதனை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நடக்காத ஒரு விஷயத்தை, எதற்கு படத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதனை படக்குழு நீக்க வேண்டும், மேலும் இதுபோன்று ஒரு சில காட்சிகளை எடுத்துரைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதனை நீக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த படத்தை பார்க்கும் போது, திமுக தலைவர், அதிமுக மற்றும் அம்மாவின் வரலாறு என்று எடுத்தால், திமுகவின் தொல்லைகள், அராஜகங்கள், அப்போது அதிமுகவிக்கு, திமுக தலைவர் கொடுக்காத தொல்லைகள் கிடையாது. ஆனால், அதை எல்லாம் படத்தில் இல்லை என விமர்சித்தார்.

வரலாறு படம் என்றால், அதையும் சொல்ல வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி நல்லவர் போல் காட்சிப்படுத்திவிட்டு முடித்துவிட்டார்கள் என குற்றசாட்டினார். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு, திமுக அரசும், திமுக தலைவரும் அன்றைக்கு அம்மாவுக்கு கொடுத்த சொந்தரவுகள் குறித்து படத்தில் சொல்லவில்லை.

இதெல்லாம் சொல்ல மறந்த கதைகள் என தெரிவித்தார். இப்படத்தில் ஒரு சில காட்சிகளை நீக்கிவிட்டு, பார்த்தால் எங்கள் கட்சியிலும் சரி, பொது மக்களிடையும் சரி, ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்