பட்டாசு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!
நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார், தாயார் செல்வி, மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.
கிடங்கில் இடமில்லாததால் வீட்டிலும் பதுக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மோகனுர் டவுனில் தில்லை யார் ஒர்க் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார் தில்லைக்குமார். புத்தாண்டை முன்னிட்டு விற்பனை செய்ய அதிக அளவில் பட்டாசுக்களை கிடங்கில் சேமித்து வைத்துள்ளார் தில்லைக்குமார்.
இந்த நிலையில், நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த தில்லைக்குமார், செல்வி, பிரியா மற்றும் மூதாட்டி பெரியக்காள் ஆகியோருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். பட்டாசு விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஆணையிட்டுள்ளார்.