பட்டாசு விபத்து – 2 பேர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு!
பட்டாசு ஆலை தீ விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன் என முதல்வர் இரங்கல்.
தருமபுரி மாவட்டம் பொன்னகரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். நாகதாசம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பழனியம்மாள், முனியம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு கிடங்கில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் நிதியுதவி:
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவருக்கு ஒரு லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மிகுந்த வேதனை:
தருமபுரி மாவட்டம் அருகே நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் முனியம்மாள் (வயது 65) மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த பழனிம்மாள் (வயது 50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்:
மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் அறிந்தேன். மேலும், இவ்விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கம் (வயது 52) அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
பொது நிவாரண நிதி:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கம் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.