தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு: ரூ.1 கோடி நிதியுதவி உயர்த்தித் தரவேண்டும் – சீமான்
தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி உயர்த்தித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாட்களுக்கு முன்பு மதுரை தெற்கு மாசி வீதியில் ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீயை அணைக்கும் பணியில் இடிபாடுகளில் சிக்கி சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், மதுரையிலுள்ள துணிக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், முன்கள வீரர்களாகத் தீயை அணைக்கப் போராடியபோது சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு தீயணைப்பு வீரர்களும் அவ்விபத்தில் சிக்குண்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர் எனும் செய்தி பெருந்துயரத்தைத் தந்தது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அந்தவகையில், தங்கள் உயிரையே ஈகம் செய்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு அளித்துள்ள 25 இலட்ச ரூபாய் நிதியுதவியானது போதுமானதில்லை. ஆகவே, தற்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை 25 இலட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாயாகவும், காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் வீரர்களுக்கான நிதியுதவியை 3 இலட்சத்திலிருந்து 10 இலட்ச ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை துணிக்கடை தீவிபத்து மீட்புப்பணியின்போது, இன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்!https://t.co/2JJZJZA7yQ#FireFighters #MaduraiFireAccident pic.twitter.com/GU41bN0Xp3
— சீமான் (@SeemanOfficial) November 16, 2020