குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்தவர்களின் நிலை என்ன?தேனி, மதுரை மருத்துவனைகளில் விவரம்…..
9 பேர் தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களில் தற்போது ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களின் ஆண்கள் 3 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 7 பேர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அனுவித்யா 90 சதவீத தீக்காயத்துடனும், கண்ணன், ஸ்வேதா, சதீஸ் ஆகியோர் 50 சதவீத தீக்காயத்துடனும், சிவசங்கரி 30 சதவீத காயத்துடனும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இலக்கியா என்பவர் 10 சதவீத காயத்துடன் சிகிச்சையில் உள்ளதாகவும், சபிதா என்பவர் 10 சதவீத காயங்களுடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மேலும், காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களில் 12 பேருக்கு மதுரை ராஜாஜி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் சந்தித்து பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தனிப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 5 பேர் கொண்ட மருத்துவக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.