நிதிநிலை அறிக்கை என்பது பூனை எலியை கவ்வுவது போல் உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
நிதிநிலை அறிக்கை என்பது பூனை எலியை கவ்வுவது போல உள்ளது என அதிமுக எம்எல்ஏ ஆர்.பி உதயகுமார் விமர்சனம்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாத கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், ஒரு அறிக்கையை தயார் செய்யும் போது, தாய் பூனை குட்டி பூனையை வாயில் கவ்வுவது போல் தாய் பாசத்தோடு இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது என விமர்சித்துள்ளார். மேலும், எனக்கு பொருளாதாரம் தெரியாது, ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும் என்றும் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அடிப்படையே அதிமுக அரசு கொண்டு வந்த மடிக்கணினி திட்டம் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில், கடந்த 13ம் தேதி முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது மற்றும் 14ம் தேதி வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.