நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் – முதல்வர் ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் : இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு நேற்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024 தாக்கல் செய்தார். தொடர்ந்து 7-வது முறையாக மத்திய நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்காக எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை, அதை குறித்து தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில்,”ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது.
ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது. அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன. இந்த ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
‘ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்’ – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அறிக்கை pic.twitter.com/WD66GPGR3g
— DMK (@arivalayam) July 23, 2024
இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது. மேலும், நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. மத்திய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் ஆகும்.
மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாநிலத்திற்கு வழங்கிட வேண்டு மென்று மீண்டும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்”, என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.