தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
தூத்துக்குடி இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.10 லட்சம் நிதியுதவியானது புத்தொழில் களம் திட்டத்தின் கீழ் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், “புத்தொழில் களம்” எனும் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார்.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் இளம் தொழில் முனைவோர்கள் 3 பேருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் தங்கள் திட்டங்களுடன் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த விண்ணப்பங்கள் பிப்ரவரி 26வரை வரவேற்கப்பட்டன. 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் தொழில் திட்டங்களுடன் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டநிலையில், இறுதிப் போட்டியாளர்களான 3 பேரின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எம்.பி. கனிமொழி தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வானது தூத்துக்குடியில் உள்ள மாநகராட்சி மாநாட்டு மையத்த்தில் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் திமுக எம்பி கனிமொழி உடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு தொழில் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். புத்தொழில் களம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.