ஜெருசலேம் செல்லும் கன்னியாஸ்திரிகளுக்கு நிதியுதவி ரூ.60,000-ஆக உயர்வு..!
கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்லும் அருட்சகோதர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.60,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்லும் அருட்சகோதர்கள், கன்னியாஸ்திரிகள் புனித பயணம் மேற்கொள்வதற்கான வழங்கப்படும் நிதியுதவியை கடந்த 2020-21-ஆம் ஆண்டிலிருந்து ரூ.20,000-லிருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையில், சிறுபான்மையினர் நலத்துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் மஸ்தான் வெளியிட்டார்.
அதில், ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.37 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், ஜெருசலேம் செல்லும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.