நிதித்துறை வளாகம் பெயர் மாற்றம் – அதிமுக கடும் கண்டனம்!

Default Image

நிதித்துறை வளாகத்தின் பெயர் பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் மாற்றம் செய்ததற்கு அதிமுக கண்டனம்.

சென்னை ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தின் பெயர் பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் மாற்றம் செய்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டு மக்களின் நீங்கா இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கவுரவிக்கும் விதமாக சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள நிதித்துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என அதிமுக ஆட்சி காலத்தில் பெயர் சூட்டப்பட்டது.

‘அம்மா வளாகம்’ என்ற பெயரில் இயங்கி வரும் அந்த நிதித் துறை வளாகத்தில் திமுக பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் மறைந்த க.அன்பழகன் அவர்களின் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும், அந்த வளாகத்திற்கு ஏற்கனெவே உள்ள ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு பேராசிரியர் அன்பழகன் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.

பேராசிரியர் அன்பழகன் நிதித் துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில், ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் அன்பழகன் ‘மாளிகை’ என்று வைப்பது நாகரிகமற்ற செயல்.

ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொவருவரை புகழ்வது போல் ஆகும். இதுபோன்ற செயல் தமிழ்ப் பண்பாட்டிற்கு, தமிழ் கவாச்சாரத்திற்கு எதிரான செயல். அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தேசியத் தலைவராக அனைவராலும் கருதப்பட்டார்.

இப்படிப்பட்ட தலைவரின் பெயரில் அமைந்துள்ள வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுகிறது என்று வந்துள்ள செய்தியில் உண்மை இருப்பின் அது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை மாற்றி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயரைச் சூட்டலாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்