உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் அரசுக்கு இத்தனை கோடி இழப்பா? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!
உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் ரூ.2577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள ஒவ்வொரு துறை வாரியாகவும், வருவாய், இழப்பு குறித்து அமைச்சர் ஸ்லைடு ஷோ போட்டு காட்டி விளக்கம் அளித்து அவருகிறார்.
அப்போது, 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரம் கோடியாகவும், 2016-21ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனக் கூறியுள்ளார். இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்,உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு சரியான நேரத்தில் நடத்தாததால்,தமிழக அரசுக்கு ரூ.2577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும்,தமிழகத்தில் வருவாயை விட செலவு அதிகரித்துள்ளது. இதனால்,தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது. என்றும் தெரிவித்துள்ளார்.