அதிமுக ஆட்சிக்காலத்தில் தவறான செலவு இத்தனை கோடிகளா?- நிதியமைச்சர் பிடிஆர் தகவல்..!
அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.1 லட்சம் கோடி தவறான திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் செலவிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கையில் உள்ள ஒவ்வொரு துறை வாரியாகவும், வருவாய், இழப்பு குறித்து அமைச்சர் ஸ்லைடு ஷோ போட்டு காட்டி விளக்கம் அளித்து வருகிறார்.
வருவாய் பற்றாக்குறை:
அப்போது, 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரம் கோடியாகவும், 2016-21ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது,தமிழக அரசு மானியம் வழங்கியதில் முறையான விபரம் இல்லை என கூறினார்.
இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை.ஏனெனில்,பணமதிப்பிழப்பு, முறையற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் சுமை:
மேலும்,தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளதாக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியாக அனைவருக்கும் அமைந்துள்ளது. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
கடன்:
அதுமட்டுமல்லாமல்,குடிநீர் வடிகால் வாரியத்தின் கடன் ரூ.2,890.26 கோடியாக உள்ளது.மின்சார வாரியத்தின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது.69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
இதனால்,வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3 வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.உலகப் பொருளாதார நெருக்கடி வந்தால் சராசரி மாநிலத்தை விட தமிழ்நாடு அதிகம் பாதிக்கும் என தெரிவித்தார்.
இழப்பு:
மேலும்,மத்திய அரசின் உதய் மின்திட்டத்தை அமல்படுத்தியதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.48,500 கோடி இழப்பு.அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் இழப்பு ரூ.42,413 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு:
இந்நிலையில்,கடந்த அதிமுக ஆட்சியின் சரியான திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கடன் வாங்குவது தவறல்ல எதற்காக கடன் வாங்கப்படுகிறது என்பது முக்கியம்.கடனை மானியங்களுக்காக செலவிட்டால் வட்டி அதிகரித்து கடன் சுமை உயரும்.அவ்வாறு வாங்கிய கடனை ஊழலின்றி செலவு செய்தால் நஷ்டம் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.