பாரதியார் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
தூத்துக்குடி எட்டயபுரத்தில் பாரதியார் புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த ஊரில், அவரின் புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் வாழிய பாரத மணித்திருநாடு என்ற மின்னூலையும் வெளியிட்டார் நிதியமைச்சர். மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன்பின் பாரதியார் நூற்றாண்டு விழாவில் பேசிய நிதியமைச்சர், பெண் விடுதலைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் பாரதியார். தூத்துக்குடி பள்ளிகளில் பாரதியார் பாடல், கவிதைகளை சொல்லி கொடுங்கள், போட்டி வைத்து பரிசளியுங்கள் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, மகாகவி பாரதியார் மணி மண்டபத்தில் உள்ள பாரதியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்ற அவர் அங்குள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.